கோலாலம்பூர், ஜனவரி.25-
பாத்தாங் பெனார் நிலையத்தில் திட்டப் பொறியியல் தொடர்வண்டி ஒன்று தடம் புரண்டதைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு கேடிஎம் கொமுட்டர் சேவையில் இன்று மதியம் முதல் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் பத்துமலை - பூலாவ் செபாங் இடையிலான தொடர்வண்டிகள் தற்காலிகமாக பாத்தாங் பெனார் நிலையத்தில் நிறுத்தப்படாது என்பதால், பயணிகளின் வசதிக்காக நீலாய் - பாங்கி நிலையங்களுக்கு இடையே மாற்றுப் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தற்போது சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பயணிகள் மேலதிக விபரங்களுக்கு நிலைய அதிகாரிகளை அணுகலாம் அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து கவனிக்கலாம் என்றும் கேடிஎம்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.








