கோலாலம்பூர், ஜூலை.21-
செயல்படுத்தும் முறையின் மாற்றங்கள் காரணமாக இலக்குக்கு உரிய ரோன் 95 உதவித் தொகைத் திட்டத்தின் அமலாக்கம், சற்று தாமதமாகலாம் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இலக்குக்கு உரிய ரோன் 95 உதவித் தொகைத் திட்டத்தின் செயல்முறையை இன்னும் விரிவாக மறுஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் மீது பாதகமானத் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்காக அதன் கொள்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் அரசாங்கம் தற்போது மேம்படுத்தி வருவதாக தகவல் தொடர்பு அமைச்சருமான டத்தோ ஃபாமி கூறினார்.
எந்தவொரு கொள்கையையும் அரசாங்கம் அமல்படுத்தும் போது, அது பெரும்பான்மையான மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது என்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியாக இருப்பதாக டத்தோ ஃபாமி விளக்கினார்.
இன்று நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஃபாமி இதனைத் தெரிவித்தார்.
மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, முந்தைய கொள்கைகளில் ஏற்கனவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதையும் டத்தோ ஃபாமி சுட்டிக் காட்டினார்.








