கோலாலம்பூர், அக்டோபர்.15-
கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸாலிஹா முஸ்தஃபாவின் அரசியல் செயலாளராக பிகேஆர் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவமலரின் பதவி உறுதி மொழி மற்றும் ரகசிய காப்புச் சத்தியப் பிரமாணச் சடங்கு இன்று நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் முன்னிலையில் நடைபெற்றது.
நகர்ப்புற மக்களின் நல்வாழ்வை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும், அரசு சேவைகளை வழங்குவதை வலுப்படுத்துவதிலும் அமைச்சருக்கு உதவுவதற்கான ஒரு பெரிய நம்பிக்கை மற்றும் தார்மீகப் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக பதவி உறுதிமொழி சடங்கிற்கு பிறகு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் சிவமலர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் என்ற முறையில், மக்களின் நலனுக்காக மடானி கொள்கைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தொடர்ந்து பங்களிப்பதற்கான ஒரு பெரிய அறங்காப்புப் பணியாக இந்த நியமனத்தை தாம் பார்ப்பதாக சிவமலர் குறிப்பிட்டார்.
சிவமலர், கூட்டரசு பிரதேச இலாகாவில் பணியாற்றுவதற்கு முன்னதாக புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு என்ற நிலையில் பொதுச் சேவைத்துறையில் பணியாற்றிய பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








