சிப்பாங், ஜனவரி.22-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ைஏவில் சட்டவிரோத வாடகை வாகனச் சேவையில் ஈடுபடும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே எச்சரித்துள்ளது.
இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் நாட்டின் தோற்றத்தை பாதிக்கச் செய்வதுடன் சுற்றுலா மற்றும் பொதுப் போக்குவரத்துத் துறைகளிலும் எதிர்மறையான பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜேபிஜேவின் அமலாக்கப் பிரிவு இயக்குனர் டத்தோ முஹமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் மட்டும் கேஎல்ஐஏ முனையங்களில் 211 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தச் சட்டவிரோத வாகன ஓட்டிகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 2.03 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் இதே தவறைச் செய்பவர்களின் வாகனங்கள் 2010 ஆம் ஆண்டு தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் முஹமட் கிஃப்லி எச்சரித்துள்ளார்.








