உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், மானியம் வழங்கப்பட்ட எரிபொருள் கடத்தப்படுவதைத் தடுக்க சிலாங்கூர் மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நேற்று அதிகாலை 1.00 மணியளவில் கிள்ளான் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் டீசல் பரிமாற்றம் செய்த ‘பாண்டட்’ லாரி ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த லாரியின் பின்புறத்தில் 4,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘ஸ்கிட் டேங்க்’ மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமட் ஹனிப் பின் ஆசாரி தெரிவித்தார்.
அதிலிருந்து சுமார் 3,000 லிட்டர் டீசல் மற்றும் லாரி என மொத்தம் 53,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முகமட் ஹனிப் குறிப்பிட்டார்.
உரிய ஆவணங்கள் இன்றி எரிபொருளை வைத்திருந்த 45 வயதிற்குட்பட்ட லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும், சட்டவிரோத விற்பனைக்கு உடந்தையாக இருந்த பெட்ரோல் நிலையத்தின் மீதும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 16 முதல் மேற்கொள்ளப்பட்ட OPS TIRIS 4.0 சோதனைகளில், இதுவரை 542 இடங்கள் சோதனையிடப்பட்டு, 129,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்னார்.
சட்டத்தை மீறுவோருக்கு 10 லட்சம் ரிங்கிட் முதல் 50 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாநில இயக்குனர் முகமட் ஹனிப் எச்சரித்துள்ளார்.











