நெகிரி செம்பிலானிலிருந்து வட கிள்ளான் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலன் லோரி ஒன்று, எலிட் நெடுஞ்சாலையில் நேற்று இரவு தீப்பற்றியதில், அதில் இருந்த பிளாஸ்டிக் துகள்கள் சுமார் 90 விழுக்காடு எரிந்தன.

கேஎல்ைஏவிலிருந்து ஷா ஆலாம் நோக்கிய எலிட் நெடுஞ்சாலையின் 30.8ஆவது கிலோமீட்டரில் இரவு 10.58 மணியளவில் இச் நிகழ்ந்தது. தகவல் கிடைத்ததும் டெங்கில் தீயணைப்பு மீட்புப் படையினர் 11.12 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தனர்.

லோரியின் ஓட்டுநர் அஹ்மாட் அரிஃபின் அஹ்மாட் தர்மிஸி கூறுகையில், சுமார் 10.30 மணியளவில் டயர் வெடித்ததைப் போன்ற சத்தம் கேட்டதைத் தொடர்ந்து லோரியைச் சாலையோரம் நிறுத்தியதாகவும், அப்போது டயரில் தீப்பற்றியிருப்பதைக் கண்டதாகவும் தெரிவித்தார்.

தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், உடனடியாக டிரெய்லரைத் துண்டித்து லோரியின் முன்பகுதியை அப்புறப்படுத்தியதாகவும், தாம் காயமின்றித் தப்பியதாகவும் அவர் கூறினார்.

டெங்கில் மற்றும் கேஎல்ஐஏ தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 15 வீரர்கள் இரண்டு நீர்த்தாரைகள் மற்றும் ஒரு குழாய் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 11.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.








