பள்ளிகளில் நடக்கும் பகடிவதை சம்பவங்களை வெறும் ஒழுக்கம் அல்லது நிர்வாகப் பிரச்னையாக மட்டும் கருதாமல், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு தொடர்பான முக்கிய பிரச்னையாகவும் அணுக வேண்டும் என மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகாம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுஹாகாம் சிறார் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகடி வதையைத் தடுப்பது கல்வி அமைச்சு மற்றும் பள்ளிகளின் பொறுப்பு மட்டுமல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில் எந்தவொரு மாணவரும் அவமானம், வன்முறை அல்லது பகடிவதைக்கு அஞ்சாமல் பள்ளிக்குச் செல்லக்கூடிய சூழல் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான கற்றல் சூழல், குழந்தைகள் கற்கவும் வளரவும் கல்வியில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும் அடிப்படையானது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பகடிவதை நடக்கும் இடமெல்லாம் மாணவர்களை வழிநடத்தவும், கல்வி கற்பிக்கவும், பாதுகாக்கவும் ஆசிரியர்கள் முன்வந்து அக்கறை, பரிவு மற்றும் பொறுப்புணர்வு நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது.








