நாசி கண்டார் உணவுடன் பன்றிக்கறியை விளம்பரப்படுத்துவதுபோல் சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி குறித்து ப்ரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் உணவகத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நாசி கண்டார் உணவுத்துறையினருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இச்செயல் அமைந்துள்ளது என்ற சங்கத் தலைவர் டத்தோ ஜவஹார் அலி தாயுப் கான் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளியானது மக்கள் மத்தியில் குறிப்பாக நாசி கண்டார் விரும்பிகள், வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். பலருக்குப் பிடித்த உணவான நாசி கண்டார் மீது தவறான கண்ணோட்டத்தை இந்த காணொளி ஏற்படுத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வரும் இந்த காணொளி 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.








