ஈப்போ, ஜனவரி.07-
எம். இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லாவை (Muhammad Riduan Abdullah) தேடும் முயற்சியில் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை வழங்குமாறு ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது மகள் பிரசன்னா டிக்ஷாவை ஒப்படைக்கத் தவறியதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் முகமது ரிதுவான் என்ற கே. பத்மநாபனுக்கு எதிராகப் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.
முகமது ரிதுவான் இருக்குமிடம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவரைப் பார்த்தவர்கள் உடனடியாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி அபாங் ஸைனால் கேட்டுக் கொண்டுள்ளார்.
2009-ஆம் ஆண்டு தனது 11 மாதக் குழந்தையான பிரசன்னா டிக்சாவை முகமது ரிதுவான் கடத்திச் சென்றார். பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த வழக்கில், அவரைக் கண்டுபிடித்துக் குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தனது பெண் பிள்ளையுடன் தலைமறைவாக இருக்கும் மதம் மாறியவரான முகமட் ரிதுவானின் ஆகக் கடைசி முகவரி 10, பெர்சியாரான் பாகோ டூவா, ஒஃப் ஜாலான் பாசீர் பூத்தே, ஈப்போ என்பதாகும்.
அந்த நபரைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் 012- 909 3362 என்ற கைப்பேசி எண்ணில் துணை சூப்ரிடெண்டன் Yap Siew Ching- குடன் தொடர்பு கொள்ளுமாறு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஏசிபி அபாங் ஸைனால் கேட்டுக் கொண்டுள்ளார்.








