நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 8 மலேசியர்களுடன் மாயமான தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த 44 வயது அதிகாரி முஹமட் ஃபக்ருல் முனிர் முஹமட் இசா நிச்சயமாகக் கண்டுபிடிக்கப்படுவார் என்ற நம்பிக்கையை அவரது மனைவி ஹானி ஒத்மான் தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.
“எனது கணவரின் நிலை குறித்து எதையும் உறுதிப்படுத்தும் ஆதாரம் கிடைக்காத வரை நம்பிக்கை இருக்கிறது,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி, எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பயணத்தின் போது, அவர்கள் சென்ற நான்கு சக்கர வாகனம் ரசுவா பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு வழியாகச் சென்ற போது வெள்ளத்தில் சிக்கியதாக நம்பப்படுகிறது.
மாயமானவர்களில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டு துணை இயக்குநர் முஹமட் சானி ஹாருல் உள்ளிட்ட 8 மலேசியர்களும், நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
கணவரையும் அவரது குழுவினரையும் தேடும் மீட்புப் பணிகளின் நிலவரத்தை அறிய ஹானி கடந்த 11 நாட்களாக நேபாளத்தில் உள்ளார்.
மலேசியாவின் ஸ்மார்ட் பேரிடர் மீட்புக் குழு, முக்கியப் பேரிடர் பகுதிகளில் ஒன்றான திரிசூலி பகுதிக்கு நேற்று சென்றுள்ளதாக விஸ்மா புத்ரா மூலம் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 55 மலேசியர்கள் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








