கெடா, லூனாஸ், வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அண்மையில் இந்தியாவிலிருந்து மாணவர்கள் வருகைப் புரிந்தனர். மலேசிய தமிழ்ப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் முறையை அறிந்து கொள்ளும் பொருட்டு,இந்திய மாணவர்களின் இவ்வருகை அமைந்திருந்தது.
மலேசிய இந்திய இளைஞர் இயக்கத்தின் ஆதரவுடன் Royal Commonwealth, Audacious அறவாரியம் ஏற்பாட்டில் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்திலிருந்து 45 மாணவர்களும் இரு விரிவுரையாளர்களும் மேற்கொண்ட இந்த கல்விச்சுற்றுலாவில், வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் செல்வி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் காளிப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பை நல்கினர்.
மலேசியாவின் கலை, கலாச்சாரங்களின் கூறுகள் மற்றும் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் புத்தாக்கத் திறன் குறித்து செய்முறை விளக்க படைப்புகள் பல்லைக்கழக மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் மிக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் அற்புதமான படைப்புகளை காண ஓர் அரிய வாய்ப்பு தங்ளுக்கு கிடைத்ததாக அப் பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் தினேஸ் பெருமிதம் தெரிவித்தார்.
குறிப்பாக, வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் புத்தாக்க போட்டிகளில் அவர்களின் பங்கேற்பு மற்றும் சாதனை போன்றவற்றை விவரிக்க வார்த்தையில்லை என்று விரிவுரையாளர் தினேஸ் புகழாரம் சூட்டினார்.
இந்தக் கல்விச் சுற்றுலாவின் மூலம் , மலேசியா - இந்தியா ஆகிய இரு நாடுகளின் பள்ளிகளுக்கு இடையிலான நல்லுறவை வளர்ந்துக் கொள்வதற்கும், கல்வித்திறன்களை பரிமாறிக் கொள்வதற்கும் பரஸ்பர நட்பு பாராட்டும் விதமாக பள்ளி தலைமையாசிரியரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விரிவுரையாளரும் கையொப்பமிட்ட நற்சான்றிதழ்களை பரிமாறிக் கொண்டனர்.








