மலேசியாவில் வெளிநாட்டுவாசிகள் வணிகர்களாக உருவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், சுற்றுப் பயணிகளாகவும் தொழிலாளர்களாகவும் உள்ளே வந்தவர்கள் இப்போது அனுமதி இன்று பல வியாபாரங்கள் செய்து மலேசிய வியாபாரிகளுக்குப் பெரும் இடையூறாக இருப்பதாக பல அரசு சாரா அமைப்புகள் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய மலேசிய இயக்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ கலைவாணர் கூறுகயில், மலேசியர்கள் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என்பது அரசு அமலாக்க இலாகாவின் சோதனை நடவடிக்கையில் தெரிய வந்தால் வியாபாரப் பொருட்களைப் பறிமுதல் செய்வது, உடனடியாக அபராதம் விதிப்பது போன்ற துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், வெளிநாட்டுவாசிகள் இது போன்ற குற்றங்கள் புரியும்போது அமலாக்கப் பிரிவினர் எங்கே சென்றார்கள் எனக் கேள்வி எழுப்பினார் டத்தோ கலைவாணர்.
கடந்த வாரம் தாம் நடத்தியப் போராட்டத்தின் காரணமாக பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் குடிநுழைவுத் துறை உட்பட சில அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வெளிநாட்டுவாசிகளின் சிறு வணிகக் கடைகள் மீது அதிரடி நடவடிக்கையை எடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் தங்கள் வணிகத்தைத் தொடர்ந்து இருக்கிறார்கள் எனத் தமது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தார்.
மலேசிய வியாபாரிகளைப் பாதிக்கும் இந்த நடவடிக்கையை முற்றாகத் துடைத்தொழிக்க வேண்டி முதற்கட்டமாக, கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் டிபிகேஎல்-இன் டத்தோ பண்டாரிடம் இவ்விவகாரம் குறித்து 9 அரசு சாரா அமைப்புகள் இணைந்து மனு ஒன்றை வழங்க இருப்பதாகவும் அடுத்தக் கட்டமாக பிரதமரிடமும் இவ்விவகாரத்தைக் கொண்டு செல்ல இருப்பதாகவும் டத்தோ கலைவாணர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முறையான அனுமதி இல்லாமல் லெபோ அம்பாங், மஸ்ஜிட் இந்தியா, பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் ஈப்போ போன்ற பகுதிகளில் நிரம்பி இருக்கும் வெளிநாட்டுவாசிகளின் வியாபார நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.








