கிள்ளான், நவம்பர்.13-
கிள்ளான், பெர்சியாரான் ராஜா மூடா மூசாவில் ஓர் எண்ணெய் நிலையத்தில் கொள்ளையடித்த சந்தேகப் பேர்வழியைக் கைது செய்யும் முயற்சியில் போலீஸ்காரர் ஒருவர் காயமுற்றார் என்று தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது ஏற்கனவே சுபாங் ஜெயாவில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்த ஒரு காரை போலீசார் தேடி வந்தனர்.
அந்தக் கார், கிள்ளானில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் நிற்பதைக் கண்ட ரோந்துப் போலீசார், அந்த காரில் இருந்த நபரைக் கைது செய்யும் முயற்சியின் போது, போலீஸ்காரர் ஒருவரைச் சந்தேகப் பேர்வழி மூர்க்கமாகக் கீழே தள்ளி விட்டு தப்பிக்க முற்பட்டுள்ளார்.
காரை மின்னல் வேகத்தில் செலுத்திய அந்த நபர், கீழே விழுந்து கிடந்த போலீஸ்காரரின் காலை உரசிய வண்ணம் மோதி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஏசிபி ரம்லி காசா குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு இன்று வந்த தகவலைப் போல கிள்ளானில் நடந்தது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அல்ல. மாறாக, சந்தேகப் பேர்வழி, போலீஸ்காரரை மோதி விட்டுத் தப்பிச் செல்லும் சம்பவம் தொடர்புடைய காணொளியாகும் என்று ரம்லி காசா விளக்கம் அளித்தார்.








