மலாக்கா, டிசம்பர்.17-
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீஸ்காரர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை சட்டத்துறை அலுவலகம், கொலையாக மறுவகைப்படுத்தி, இருப்பதால் எல்லா சூழ்நிலைகளிலும் மலாக்கா மாநில போலீஸ் தலைவர் என்ற முறையில் தாம் முழுப் பொறுப்பேற்பதாக ஸுல்கைரி முக்தார் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி இந்த விசாரணையில் மலாக்கா மாநில போலீஸ் தலையிடாது என்று ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தவறு ஏதேனும் நிகழ்ந்து இருக்குமானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிச் செய்வேன். அதே வேளையில், இந்த விசாரணை தொடர்பில் சட்டத்துறை அலுவலகத்துக்கு முழு ஒத்துழைப்பு நல்குவேன் என்று ஸுல்கைரி முக்தார் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, விசாரணை தற்போது புக்கிட் அமான் கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிந்த நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண்ணின் பின்னணி குறித்த தாம் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையாக மாறியதையும் ஸுல்கைரி முக்தார் சுட்டிக் காட்டினார்.
தாம் அவ்வாறு கூறியது தவறு என்றால் தம் மீது வழக்குத் தொடரலாம் என்று ஸுல்கைரி முக்தார் சவால் விடுத்துள்ளார்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஆடியோவில் பதிவு செய்ததாகக் கூறப்படும் பெண், சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் சட்டப்பூர்வமான மனைவி அல்ல என்றும் காதலி என்றும், அவர் மீது பத்துக்கு மேற்பட்ட குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் ஸுல்கைரி முக்தார் இதற்கு முன்பு அறிவித்து இருந்தார்.








