பத்துகேவ்ஸ், ஜூலை.14-
அனைத்துலக தரத்திலான 10 புதிய டீசல் ரெபிட் பேருந்துகள் இன்று அதிகாரப்பூர்வமாகச் சேவையைத் தொடங்கின.
இவ்வாண்டு ஜுலை மாதம் தொடங்கி, 2026 ஆம் ஆண்டு முதலாவது காலாண்டில் கட்டம் கட்டமாக தருவிக்கப்படவிருக்கின்ற ஈரோ 5 ரகத்திலான 310 ரெபிட் பேருந்துகளில் முதல் கட்டமாக 10 பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
நாட்டின் பொதுப் போக்குவரத்துத்க் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இது திகழ்கிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்த வல்ல அனைத்துலக தரத்திலான இந்த பேருந்துகள் ஈரோ 5 தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும்.
ஈரோ 5 தொழில்நுட்பம் என்பது கார்பன் டியொக்சைட் வெளியீட்டை 0.4 விழுக்காடாகக் குறைக்க வல்லதாகும். நைட்ரோஜன் ஒக்சிடா வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.
இன்று பத்துகேவ்ஸில் உள்ள ரெபிட் பேருந்து வளாக டிப்போவில் புதிய ரக டீசல் ரெபிட் பேருந்துகளின் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து செய்தியார்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.








