கோலாலம்பூர், டிசம்பர்.01-
பகடிவதை எதிர்ப்பு சட்ட மசோதா 2025 ஆனது நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, முதல் வாசிப்பிற்காக தாக்கல் செய்யப்படவுள்ளது.
இன்று டிசம்பர் 1-ஆம் தேதிக்கான நிகழ்ச்சி நிரலின்படி, இன்றைய நாளில் தாக்கல் செய்யப்படவுள்ள மூன்று மசோதாக்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த சட்ட மசோதாவில் பகடிவதை எனும் செயல் தெளிவாகவும், முழுமையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளதாக சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
அவற்றில், உடல்மொழி, வாய்மொழி மற்றும் இணைய பகடிவதை உள்ளிட்ட கூறுகளும் அடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த வரையறையானது, பகடிவதைக்கு எதிரான தடுப்பு, அமலாக்கம் மற்றும் மறுவாழ்வுக்கான நிலையான பரிந்துரையை நிறுவனங்கள், முகமைகள், பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு வழங்குகின்றது.








