Nov 6, 2026
Thisaigal NewsYouTube

நஜிப் வீட்டுக்குச் சென்றால் பதவி விலகுவேன்! அந்தோணி லோக் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப் வீட்டுக்குச் சென்றால் பதவி விலகுவேன்! அந்தோணி லோக் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் சிறையிலிருந்து வெளியேறி வீட்டுக்காவலில் எஞ்சிய தண்டனையை அனுபவிக்கத் தனது இல்லத்திற்குச் சென்றால், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உடனடியாகப் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜசெக பொதுச் செயலாளருமான அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

நஜிப் தொடர்பான விவகாரத்தில் தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நஜிப் தனது இல்லத்தைச் சென்றடைந்தவுடன் பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

தமது பதவி விலகல் கடிதத்தை ஏற்கெனவே பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், இதனை முறைப்படுத்த கூடுதல் கடிதம் ஒன்றை வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நஜிப் காஜாங் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவர் பல் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்தோணி லோக் விளக்கமளித்தார். நஜிப் வீட்டுக்குச் செல்ல இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், போக்குவரத்து அமைச்சின் நிர்வாகப் பணிகள் தடையின்றித் தொடரும் என்றும், மைகொம்யூட்டர் 50 திட்டம் டிசம்பரிலும், கிழக்குக் கரையோர ரயில் இணைப்புத் திட்டம் டிசம்பர் 12ஆம் தேதியும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நஜிப் தனது இல்லத்தைச் சென்றடைந்த பின்னரே தமது பதவி விலகல் அமலுக்கு வரும் என அந்தோணி லோக் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →