போலி குடிநுழைவுத்துறை பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் கும்பலைச் சேர்ந்த மூவரை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி சிலாங்கூர் காஜாங் மற்றும் கோலாலம்பூர் பாண்டான் பெர்டானா பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், 40 முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு மலேசிய ஆடவரும், தாய்லாந்தைச் சேர்ந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் போலி குடிநுழைவு முத்திரைகள், தாய்லாந்து கடப்பிதழ்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, ஒவ்வொரு போலி முத்திரைக்கும் 70 முதல் 100 ரிங்கிட் வரை கட்டணம் வசூலித்த இந்தக் கும்பல், மாதம் 15 ஆயிரம் ரிங்கிட் வரை வருமானம் ஈட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் குறிவைத்து இந்தச் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக டத்தோ ஸக்காரியா ஷாபான் தெரிவித்தார்.








