புக்கிட் காயு ஹீத்தாம், ஜனவரி.26-
புக்கிட் காயு ஹீத்தாம் பகுதியில் உள்ள எல்லைச் சோதனைச் சாவடியில், சரக்கு லாரி ஒன்றின் எரிபொருள் தொட்டியைச் சட்டத்திற்குப் புறம்பாக மாற்றம் செய்து அண்டை நாட்டிற்கு டீசல் கடத்த முயன்ற சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற சோதனையின் போது, அந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,900 லிட்டர் டீசலை மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு - பாதுகாப்பு முகமையினர் கைப்பற்றியதாக அதன் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் தலைவர் சைஃபுல் ஜெஃப்ரி ரஸாலி தெரிவித்தார்.
சுமார் 68 ஆயிரத்து 352 ரிங்கிட் மதிப்புள்ள டீசலையும் அந்த லாரியையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதார நலனைப் பாதுகாக்கும் நோக்கில், எல்லைப் பகுதிகளில் இது போன்ற கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கத் தொடர்ந்து கடுமையான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.








