Nov 20, 2025
Thisaigal NewsYouTube
கட்டுமான மேலாளரைத் தேடும் பணி இன்று மூன்றாவது நாளை எட்டியது
தற்போதைய செய்திகள்

கட்டுமான மேலாளரைத் தேடும் பணி இன்று மூன்றாவது நாளை எட்டியது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.20-

கடந்த திங்கட்கிழமை மாலையில் சுங்கை கிளாங் ஆற்றின் சலோமா பாலத்தின் கீழ் நின்று கொண்டு இருந்த போது, திடீரென்று கரைபுரண்டோடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் 34 வயது கட்டுமான மேலாளர் கே. சுரேஸைத் தேடும் பணி இன்று மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டது.

கோலாலம்பூர் மஸ்ஜிட் ஜாமெக் சாலை சந்திப்பிலிருந்த கம்போங் தெங்கா, பூச்சோங் வரை சுமார் 26 கிலோமீட்டர் தூரம், கிள்ளான் ஆற்றின் கரையோர நடைப்பாதையில் கால்நடையாக தேடும் பணியை மீட்புப்படையினர் மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த தேடுதல் பணியில் 13 வகையான படையினர் மேற்கொண்டனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.

அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 120 வீரர்கள், தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த 60 வீரர்கள் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற பணியாளர்கள், வடிக்கால் நீர்பாசன இலாகா பணியாளர்கள் என சுமார் 200 பேர் , நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுரேஸைத் தேடும் பணியில் ஈடுபட்டனர் என்று ஏசிபி சஸாலி அடாம் குறிப்பிட்டார்.

ரவாங்கைச் சேர்ந்த அந்த கட்டுமான மேலாளர் பற்றி இதுவரையில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், மீட்புப்பணி நாளை வெள்ளிக்கிழமை தொடரும் என்றார்.

நேற்று காலையில் சுரேஸின் Four-wheel drive Pajero Mitsubishi வாகனம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

Related News