கோலாலம்பூர், ஜனவரி.03-
கடந்த நவம்பரில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆதாரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் இன்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் போலீசார் முன்பு அறிவித்ததைப் போல மலாக்கா, டுரியான் துங்காலில் நடக்கவில்லை. மாறாக ரெம்பாவ் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 224 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது என்று தாங்கள் ஆதாரங்களை சமர்ப்பித்து இருந்ததாக ராஜேஸ் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் போலீசார், தனது தடயவியல் குழுவினருடன் அவ்விடத்திற்குச் சென்று சோதனை செய்துள்ளனர் என்பதற்கு தங்களிடம் வலுவான ஆதாரங்கள் உண்டு என்று ராஜேஸ் குறிப்பிட்டார்.
ஆனால், சுடப்பட்டவர்களின் உடல்கள், திடீரென்று டுரியான் துங்காலில் காணப்பட்டதைப் போல் ஆதாரங்கள் காட்டப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் மகஜர் ஒப்படைக்கும் நிகழ்வில் ராஜேஸ் இதனைத் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையானது, கொலை நடந்த இடத்தை மாற்றி, இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் பெரும் முயற்சியாகும் என்று ராஜேஸ் குற்றஞ்சாட்டினார்.








