Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விலைவாசியை முதலில் கட்டுப்படுத்துங்கள், அரசாங்கத்திற்கு சங்கரன் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விலைவாசியை முதலில் கட்டுப்படுத்துங்கள், அரசாங்கத்திற்கு சங்கரன் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன்.16-

தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதை விட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ G. சங்கரன் கேட்டுக் கொண்டார்.

அடிப்படைச் சம்பளத்தை எவ்வளவு உயர்த்தினாலும், கூடவே அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டு இருந்தால், அதனால், மக்களுக்கு எந்த நன்மையுமில்லை என்று டத்தோ சங்கரன் குறிப்பிட்டார்.
தற்போது குறைந்த பட்ச சம்பள விகிதமான 1,700 ரிங்கிட், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 ஆயிரம் ரிங்கிட்டாக உயரலாம், ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருந்தால், இந்த சம்பள உயர்வு என்பது அர்த்தமற்றதாகி விடும் என்று டத்தோ சங்கரன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மலாக்காவில் 21 ஆவது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மலாக்கா மாநில கிளையின் பிரதிநிதிகள் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து பேசுகையில் டத்தோ G. சங்கரன் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதலாளிமார்களுக்கும், தோட்ட நிர்வாகங்களுக்கும் தோட்டத் தொழிலாளர் சங்கம் நிறைய ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளது.

ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பள உயர்வை மட்டும் கொடுப்பதில்லை என்று டத்தோ சங்கரன் குறிப்பிட்டார். அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவிற்குப் படையெடுப்பதற்கு இங்குள்ள சம்பள முறை, அவர்களின் சொந்த நாட்டுடன் ஒப்பிடுகையில் பெரிய தொகையாக இருக்கலாம். ஆனால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது என்று டத்தோ சங்கரன் தமது உரையில் குறிப்பிட்டார்.

மலாக்கா மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மலாக்கா அரசாங்கம் வழங்கிய 4 ஆயிரம் ரிங்கிட் நிதிக்கான மாதிரி காசோலை மாநில தொழிற்சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இதில் மலாக்கா மாநில தொழிற்சங்க உறவு இலாகா, தொழிற்சங்க பதிவு இலாகா மற்றும் தொழிலாளர் இலாகாவின் இயக்குநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பணி ஓய்வு பெற்ற 5 முன்னாள் தொழிற்சங்க உறுப்பினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். மற்றும் 15 பேர் கெளரவிக்கப்பட்டனர்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனித வள அமைச்சின் தொழிலாளர் ஆலோசனை மன்றத்தில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில செயலாளர் தாமாசேகரனுக்கு மலாக்கா மாநில கிளை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →