ஜோகூர் பாரு, செப்டம்பர்.12-
இம்மாதம் முற்பகுதியில் ஜோகூர், ஶ்ரீ ஆலாம், கோத்தா புத்ரி, தாமான் சஹாயாவிக் இருவரை வெட்டுக் கத்தியினால் தாக்கிக் கடும் காயங்களை விளைவித்து, அவர்களைக் கொலை செய்ய முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடைய இரு நபர்கள் கடுமையாகக் காயமுற்றதாக ஶ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
இருவர் பயணித்தக் காரை மோதித் தள்ளிய பின்னர் அவர்களை வெட்டுக் கத்தியினால் மொத்தம் நான்கு நபர்கள் சரமாரியதாகத் தாக்கியுள்ளனர் என்று ஏசிபி முகமட் சொஹைமி குறிப்பிட்டார்.
தலை மற்றும் உடலில் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளான அவ்விரு நபர்கள் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டுச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








