கோலாலம்பூர், ஜனவரி.22-
Grok செயலி மூலம் இனி ஆபாச புகைப்படங்களையோ, பாலியல் தொடர்பான காட்சிகளையோ உருவாக்க முடியாது என X நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
X நிறுவனத்தின் ஆசியா பசிபிக் வட்டார பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இப்புதிய ஒழுங்குமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறித்து அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஃபாமி ஃபாட்சீல் குறிப்பிட்டுள்ளார்.
X தளமானது பாதுகாப்பாக செயல்படுவதற்கும், எம்சிஎம்சி விதிமுறைகளுக்கு இணங்க ஒத்துழைப்பு கொடுக்கவும் X நிறுவனம் ஒரு வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுவதாக ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 11-ஆம் தேதி, X நிறுவனத்தின் Grok செயற்கை நுண்ணறிவு செயலியை, மலேசியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக எம்சிஎம்சி அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யத் தவறியதற்காக, எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் மலேசியா ஆலோசித்து வந்தது.
இந்நிலையில், X நிறுவனம் தற்போது இந்த விவகாரத்தில் நேர்மறையான முன்னேற்றத்துடன் செயல்படுவதாக ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.








