பெர்துபுஹான் கெபங்கித்தான் திகா தாஙான் சிலாங்கூர் ஏற்பாட்டில் நேற்று அக்டோபர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை ஶ்ரீ கோம்பாக் கே.எஸ்.எல் ஃபுட்சால் மையத்தில் மெர்டேக்கா சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.
பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் P. பிரபாகரன், செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன் செல்வராஜு ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் ஃபுட்சால் போட்டியில் 32 குழுக்கள் கலந்து கொண்டன.
காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியை பத்து எம்.பி. பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
இது போன்ற போட்டிகளில் நம் இளைஞர்கள் ஈடுபடுவதன் வாயிலாக அவர்களிடையே 'இலைமறை காய் போல' மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த இயலும். இதனால், நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதுடன் அவர்கள் தடம் மாறி செல்லவும் வாய்ப்புகள் இருக்காது எனக் குறிப்பிட்ட பிரபாகரன், இந்த அமைப்பின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக 3,000 வெள்ளி நன்கொடையை வழங்குவதாக அறிவித்தார்.
இப் போட்டியில் கலந்து கொண்ட ஜெர்ஸ் ஃப்தி அணி, முதல் இடத்தை பிடித்து, சாம்பியனாக வாகை சூடியதைத் தொடர்ந்து 5,000 வெள்ளி ரொக்க பரிசுத் தொகை, பதக்கங்கள் மற்றும் சுழற்கிண்ணம் ஆகிவற்றை வென்றது.
இரண்டாம் இடத்தில் எச்எம் பிசி ஃப்சி அணி வெற்றி பெற்று 2,500 வெள்ளி பரிசுத் தொகையோடு பதக்கங்களையும் தட்டிச் சென்றது.
மூன்றாம் இடத்தில் ஐஃப்சி தக்சிமெர் அணி 1,000 வெள்ளியையும் நான்காம் இடத்தைப் பிடித்த ஏடிழ் ஃப்சி அணி 500 வெள்ளியையும் வென்றது. வெற்றியாளர்களுக்கு பெர்துபுஹான் கெபங்கித்தான் திகா தாஙான் சிலாங்கூர் அமைப்பின் தலைவர் மாறன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
மேலும், தங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து, நன்கொடை வழங்கிய பத்து எம்.பி. பிரபாகரனுக்கு மாறன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








