Jul 16, 2026
Thisaigal NewsYouTube
டிக்டாக்கில் பேராக் அரசை அவதூறாக விமர்சித்த ஆடவர்: போலீஸ் நடவடிக்கை பாய்கிறது
தற்போதைய செய்திகள்

டிக்டாக்கில் பேராக் அரசை அவதூறாக விமர்சித்த ஆடவர்: போலீஸ் நடவடிக்கை பாய்கிறது

Share:

ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் பிரதான சாலையில் விதிமுறைகள் மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குப் போலீசார் அபராதம் விதித்ததை எதிர்த்து, டிக்டாக்கில் பேராக் மாநில அரசை அவதூறாக விமர்சித்த நபர் மீது போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டத்தோ சிவநேசன்,140 ஆண்டுகள் பழமையான, மலேசியாவின் 3-ஆவது பெரிய மருத்துவமனையான இதில் தினசரி பயன்பாட்டு விகிதம் 85 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளதால் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது என்றார். மொத்தம் உள்ள 1,323 நிறுத்தங்கள் பற்றாக்குறையாக இருக்கும் இந்தச் சூழலைத் தனியார் நிர்வாகத்தின் மூலம் மறுசீரமைத்து கூடுதல் இடங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இடநெருக்கடி தமக்கும் தெரிந்த பிரச்சினைதான் எனக் குறிப்பிட்ட டத்தோ சிவநேசன், அதற்காகப் போக்குவரத்து ஒழுங்கையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் சீர்குலைக்கும் வகையில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க முடியாது என்றும், சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் வலியுறுத்தினார். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மாநில அரசைத் திட்டமிட்டு அவமதிக்கும் இத்தகைய அவதூறுப் பதிவுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Related News