Jun 27, 2026
Thisaigal NewsYouTube
அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தத்தை அனுமதிக்க முடியாது: நாடாளுமன்றத்தில் ஜெலுத்தோங் எம்பி ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்
தற்போதைய செய்திகள்

அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தத்தை அனுமதிக்க முடியாது: நாடாளுமன்றத்தில் ஜெலுத்தோங் எம்பி ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

Share:

மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய ஆடவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உள்துறை அமைச்சு இன்னும் உரிய பதிலை வழங்காத நிலையில், கொண்டு வரப்படவிருக்கும் புதிய சட்டத்திருத்தம் அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கிவிடும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற சிறைச்சாலை சட்டத்திருத்த மசோதா 2026 மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ராயர், இந்தச் சட்டத்திருத்தத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலாக்கா, டுரியான் துங்காலில் ஜி. லோகேஸ்வரன், எம். புஸ்பநாதன், டி. பூவனேஸ்வரன் ஆகிய மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்காப்புக்காகவே சுட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும், அது திட்டமிட்ட படுகொலை என்பதற்கான ஆடியோ ஆதாரங்களையும், உடற்கூறாய்வு அறிக்கைகளையும் குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் பொதுவெளியில் உடைத்துள்ளனர்.

பொதுமக்களின் கடுமையான கண்டனங்களுக்குப் பிறகு, இந்த சம்பவம், கொலை வழக்காக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மாற்றி, விசாரணை செய்ய சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்ட போதிலும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உள்துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை என்று ராயர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் மீதான அதிகாரிகளின் கொடூரமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் சம்பவங்களையும் தமது வாதத்தில் ராயர் சுட்டிக்காட்டினார். தற்போதைய நிலையில், உரிய சட்டக் கட்டுப்பாடுகள் இருக்கும் போதே அதிகாரிகள் இப்படி அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள் என்றால், புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் அதிகாரிகளுக்கு கூடுதல் பாதுகாப்போ அல்லது சட்டவிலக்கோ வழங்கப்பட்டால், நிலைமை இன்னும் மோசமாகும் என்று ராயர் எச்சரித்தார்.

புதிய சட்டத்திருத்த மசோதாவின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள பிரிவு 63A, சிறைத்துறை அதிகாரிகளுக்கு ‘தவறான நடவடிக்கைகளில் இருந்தும் சட்டப்பூர்வ பாதுகாப்பை’ அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ராயர் தெளிவுபடுத்தினார்.

மேலதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றி நடந்ததாகக் கூறி, எந்தவொரு அதிகாரியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடக் கூடாது. டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இன்னும் முறையான நீதி கிடைக்கவில்லை. இதுபோன்ற சூழலில், அதிகாரிகளுக்கு எல்லையற்ற அதிகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் சட்டத்திருத்தங்களை அரசு கொண்டு வரக் கூடாது. இது சட்டத்தின் ஆட்சிக்கே எதிரானது," என்று ஆவேசமாக உரையாற்றினார்.

ஆர்.எஸ்.என் ராயர், புக்கிட் குளுகோர் எம்.பி. ராம்கர்பால் சிங் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் வாதங்களைத் தொடர்ந்து, சிறைச்சாலை சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, நாடாளுமன்ற மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சிறப்புக் குழுவின் கூடுதல் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தத்தை ... | Thisaigal News