Jul 18, 2026
Thisaigal NewsYouTube
தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்
தற்போதைய செய்திகள்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற வேளையில், ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஜசெக வேட்பாளராக வழக்கறிஞர் கார்த்தியாயினி ஜெயபாலன் அதிகாரப்பூர்வமாகக் களம் இறங்கியுள்ளார். அவர் இன்று காலை இஸ்கந்தர் புத்ரி மாநகர் மன்ற மண்டப வேட்புமனுத்தாக்கல் மையத்தில் தனது மனுவைச் சமர்ப்பித்தார்.

கார்த்தியாயினிக்கு, ஆதரவாக ஜசெக தேசியத் தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ, ஜசெக மூத்த தலைவரும் கட்சியின் தேசியப் பொருளாளருமான நெக் கூ ஹாம் மற்றும் முன்னணி தலைவர்கள் பலரும் நேரில் வருகை தந்து தங்களின் பலத்த ஆதரவைப் புலப்படுத்தினர்.

வேட்புமனுத்தாக்கல் மையத்திற்கு வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பக்காத்தான் ஹராப்பானின் சிவப்புக் கொடிகளை ஏந்தி வாழ்த்தொலி முழங்க கார்த்தியாயினியை வழிநடத்தி வந்த வேளையில், அங்கு வந்திருந்த அவருடைய பெற்றோர் பாசத்தோடு அவருக்கு அன்பு முத்தம் தந்து, நெகிழ்ச்சியோடு ஆசிர்வதித்தக் காட்சி அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.

இத்தொகுதியில் கார்த்தியாயினியுடன் சேர்த்து மொத்தம் நான்கு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் ஸ்கூடாயில் இம்முறை நான்கு முனைப் போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கார்த்தியாயினியுடன், பாரிசான் நேஷனல் வேட்பாளர் டான் ஹியாங் கீ, பி.எஸ்.எம் கட்சி வேட்பாளர் அமீர் ஷஃபிக் அமீர் சுக்ரி, பெர்சாமா வேட்பாளர் யூஜின் சுவா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

"ஸ்கூடாயின் மகள், ஸ்கூடாயின் வளர்ச்சிக்கே!" எனும் தாரக மந்திரத்துடன் கார்த்தியாயினி, மக்கள் சேவையில் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளதால், இம்முறை ஸ்கூடாய் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News