ஜோகூர் மாநிலத் தேர்தல் களம் முறைப்படி தொடங்கியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், அவற்றின் பிரச்சாரப் பிரிவினரும் மற்றும் ஆதரவாளர்களும் அவதூறுகளையோ அல்லது வதந்திகளையோ பரப்பாமல், உண்மை மற்றும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே ஆரோக்கியமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சரும் பக்காத்தான் ஹராப்பான் தகவல் தொடர்பு இயக்குநருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தல் வேட்புமனுத்தாக்கலின் போது, பத்து பகாட் எம்.ஆர்.எஸ்.எம் மையத்தில் செமேரா சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது குசான் அபு பக்கர் அவர்களை வழிநடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபஹ்மி, தேர்தல் என்பது நாட்டின் ஜனநாயகக் கடமை என்பதால் பிரச்சாரக் கலாச்சாரம் முழுமையான ஒழுங்குடனும் நெறிமுறையுடனும் இருக்க வேண்டும் என்றார்.
சச்சரவுகளையும், உண்மைக்கு புறம்பான சலசலப்புகளையும் உருவாக்குவதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த உண்மைகளையும் முறையான தரவுகளையும் மட்டுமே பிரச்சார மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் , தேர்தல் ஆணையம் , அரச மலேசிய போலீஸ் படை ஆகியவற்றுடன் இணைந்து கூட்டுச் சிறப்புக் கண்காணிப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். .








