கோலாலம்பூர், செப்டம்பர்.25-
சிங்கப்பூர் சாங்கி சிறையில், மலேசியர் தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு, இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அது நிறுத்தப்பட்டது.
தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தாருக்கு நேற்று இரவு சாங்கி சிறை நிர்வாகம் இத்தகவலை அளித்ததாக அவர்களது குடும்ப வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
என்றாலும், சிறை நிர்வாகம் ஏன் இம்முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக கிட்டத்தட்ட 45 கிராம் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தியதற்காக, தட்சணாமூர்த்தி சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.








