கோலாலம்பூர், அக்டோபர்.24-
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அரச மலேசிய போலீஸ் படை தொடங்கிய ஓப் பெடோ சோதனை நடவடக்கையில், ஆபாச வீடியோப் படங்கள் மற்றும் சிறார் சமப்பந்தப்பட்ட பாலியல் காணொளிகளை இணையத்தின் வாயிலாக விற்பனை செய்து, சராசரி 76 ரிங்கிட் வருமானத்தை ஈட்டி வந்த 17 வயது பையனின் செயல் அம்பலமாகியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடலக ஆணையமான எம்சிஎம்சியின் ஒத்துழைப்புடன் சிறார் சம்பந்தப்பட்ட காணொளி உள்ளடக்கங்கள் பதிவேற்றம் தொடர்புடைய குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில் மொத்தம் 31 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
12 க்கும் 71 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 31 பேர், நாடு முழுவதும் 37 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைது செய்யப்பட்டனர். அதில் 17 வயது பையனின் இந்த வக்கீரச் செயலும் அம்பலமானதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேலுவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜிபி இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பையன், இணையத்தில் ஒவ்வோர் ஆபாச காணொளியைப் பதிவேற்றுவதற்கு குறைந்தபட்ச விலையாக 30 ரிங்கிட் கட்டணத்தை விதித்து வந்துள்ளார். இவ்வாண்டில் முதல் ஒன்பது மாத காலத்தில் மட்டும் 76 ஆயிரம் ரிங்கிட்டை வருமானமாக ஈட்டியுள்ளார்.
வயது குறைந்த இளையோர்கள் மத்தியில் இது போன்ற நடத்தை சீர்கேடுகள் தலைத்தூக்கியிருப்பது, உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் கவலை தெரிவித்தார்.








