கோலாலம்பூர், செப்டம்பர்.08-
இலக்குக்கு உரிய ரோன் 95 பெட்ரோல் மானியத்திற்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகளை, நலன் சார்ந்த தரப்பினருடன் ஆகக் கடைசியாக முடிவெடுக்கும் பணி, தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
தகுதி வாய்ந்த மக்களில் பெரும்பகுதியினர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்காக ரோன் 95 பெட்ரோல் மானியத்தின் இலக்குக்கு உரிய செயல்படுத்தும் பணியை அரசாங்கம் மிகக் கவனமாக வடிவமைத்து வருவதாக அவர் கூறினார்.
இந்த மாத இறுதியில் ரோன் 95 மானியம் செயல்படுத்தப்பட்டவுடன் எரிபொருள் நிரப்பும்போது மைகாட் கட்டண முறையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிச் செய்ய அரசாங்கம் பெட்ரோல் நிலைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது என்று அவர் இன்று டேவான் நெகாராவில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.








