பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்சி ஜிடின்னுக்கும் இடையில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த கடும் வாக்குவாதத்திற்கு பின்னரே அந்த முன்னாள் கல்வி அமைச்சர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 8 கோடி வெள்ளி மதிப்பிலான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்ட விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பீஆர்எம் தோண்ட ஆரம்பித்ததாக கூறப்படுவதை அந்த ஆணையத்தின் தலைமை ஆணையம் தான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த புத்ராஜெயா எம்.பி.யான ராட்சி ஜிடின்னுக்கு எதிரான விசாரணையை ஒரு மாதத்திற்கு முன்பே எஸ்பிஆர்எம் தொடங்கிவிட்டதாக அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.பிரதமர் அன்வாருக்கும், ராட்சி ஜிடின்க்கும் இடையில் நடந்த வாக்குவாதத்திற்கும்,எஸ்பீஆர்எம் விசாரணைக்கும் அறவே தொடர்பு இல்லை என்று அவர் விளக்கினார்.
ஓரின உறவு தொடர்பான குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் ராட்சி ஜிடின் முன்வைத்ததன் காரணமாக அவரை பழிவாங்கும் நோக்கில் அவருக்கு எதிராக பிரதமர் அன்வார், எஸ்பீஆர்எம் விசாரணையை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார் என்று பெர்சத்து கட்சியின் சட்டப் பிரிவு துணைத் தலைவர் சாஷா லினா அப்துல் லாதிஃப் குற்றஞ்சாட்டியிருப்பது தொடர்பில் அஸாம் பாக்கி பதில் அளித்தார்.








