Sep 19, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பின் வீட்டுக் காவல்; அதிகாரப்பூர்வ உத்தரவுக்காக காத்திருக்கும் உள்துறை அமைச்சு
தற்போதைய செய்திகள்

நஜிப்பின் வீட்டுக் காவல்; அதிகாரப்பூர்வ உத்தரவுக்காக காத்திருக்கும் உள்துறை அமைச்சு

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதம் இதுவரை உள்துறை அமைச்சுக்கோ சிறைத்துறைக்கோ கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்த பின்னரே, நஜிப்பின் வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெளிவாகும் என்றார்.

அந்தக் கடிதத்தில் நஜிப் எந்த இடத்தில் வீட்டுக் காவலில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது அந்த இடத்தை சிறைத்துறை தீர்மானிக்க வேண்டுமா என்பதும் ஆய்வு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தினால், நஜிப்பின் விடுதலைத் தேதி 2028 ஆகஸ்ட் 23 ஆகும். அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவர் 2029 ஆகஸ்ட் 23ஆம் தேதி விடுவிக்கப்படுவார்.

இதற்கிடையில், வீட்டுக் காவலை நிர்வகிக்கும் தனிச் சட்டம் மலேசியாவில் தற்போது இல்லை என்று அமைச்சர் சைஃபுடின் விளக்கினார். சிறைச்சாலைகளில் 75 ஆயிரம் பேருக்கான இடவசதி மட்டுமே உள்ள நிலையில், தற்போது சுமார் 93 ஆயிரம் கைதிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனால், குறிப்பிட்ட சில கைதிகளை மின்னணு கண்காணிப்புடன் வீட்டுக் காவலில் வைக்க வகை செய்யும் ஹவுஸ் அரேஸ்ட் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்க அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related News