கிக் (GIG) தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்காக, “கிக் சேவை வழங்கும் தள நிறுவனங்கள்” மூலம் ரிங்கிட் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்தப் பங்களிப்பு 500 இ-ஹெய்லிங் மற்றும் பி-ஹெய்லிங் ஓட்டுநர்கள், விநியோகத் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கோத்தா டாமன்சாரா, ஸ்ரண்ட் மாலில் நடைபெற்று வரும் ஃபெஸ்திவல் மேகா ஐலிண்டுங்யு நிகழ்வில் அமைச்சர், இந்த தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி, நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
ஃபெஸ்திவல் மேகா ஐலிண்டுங்யு நிகழ்வை இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன், மைஃபுயுசேர்ஜோப்ஸ் மூலம் 25 முதலாளிகள் பங்கேற்று, மாதம் 2,000 முதல் 12,000 ரிங்கிட் வரையிலான சம்பளத்தில் சுமார் 2,000 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனர் என்றார்.
ஃபுட்பாண்டா ஒரு மில்லியன் ரிங்கிட்டும், Grab 500,000 ரிங்கிட்டும், ஹாலிம் 14,412 ரிங்கிட் 40 சென்னும் பங்களித்துள்ளன. மேலும், லிண்டுங் காசே சூரி ரூமா திட்டத்தின் மூலம் 400 இல்லத்தரசிகளுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்த ரிங்கிட் 48,000 வழங்கப்பட்டுள்ளது.

வேலை தேடுவோர் தகவல்களைப் பெறுவதுடன், நேரடியாக வேலை வாய்ப்பையும் சமூகப் பாதுகாப்பையும் பெற வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கம் என்று அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.
முதலாவதாக, முன்பு 25 விழுக்காடாக இருந்த, மீண்டும் வேலைக்குச் செல்வதற்கான ஆரம்ப இபிஎஸ்ஏ அலவன்ஸ் தொகை, தற்போது 50 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று டத்தோ ஸ்ரீ ரமணன் விவரித்தார்.
மூன்றாவதாக, வேலை வாய்ப்பு காப்புறுதி முறைமையான எஸ்ஐபி மூலம் வழங்கப்படும் பாதுகாப்புத் தொகையின் உச்சவரம்பு தற்போது 25 ஆயிரம் ரிங்கிட் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், மைஃபுயுசேர்ஜோப்ஸ் தளத்தின் மூலம் 2,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்புகளுக்கான அதிகபட்ச சம்பளம் 12 ஆயிரம் ரிங்கிட் வரை இருக்கும் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் விளக்கினார்.
மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது என்று நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துகளை திசைகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பெர்கேசோவின் தலைவர் டத்தோ ஶ்ரீ சுபாஹான் கமால் மற்றும் பெர்கேசோவின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ அஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.








