நேபாள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்கள், தங்களின் நிதிச் சுமையைத் தணிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பேங்க் நெகாரா மலேசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மலேசியா சோலிடாரிடி: ஃபேமிலிஸ் இன் ஹோப் எனப்படும் மாஸ்ஃபி (MASFIH) அமைப்பின் பேச்சாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கூறுகையில், காணாமல் போனவர்களின் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் நிதி மற்றும் கடன் வசதிகளுக்கான திருப்பிச் செலுத்துதலை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
அதற்கு வட்டி, லாபம் அல்லது தாமதக் கட்டணம் விதிக்கக்கூடாது என்றும், குடும்பத்தினர் தனித்தனியாக பல வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களை அணுக வேண்டிய நிலையைத் தவிர்க்க, பேங்க் நெகாரா ஒருங்கிணைந்த நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், காணாமல் போனவர்களின் வங்கிச் சேமிப்பு, பங்குகள், அமானா நிதி, இ.பி.எஃப். சேமிப்பு மற்றும் காப்புறுதிச் சொத்துகளைப் பாதுகாக்க சட்டப்பூர்வமான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
“இந்த பேரிடரில் குடும்பத்தினர் இரண்டாவது பலியாகிவிடக்கூடாது. நாங்கள் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரவில்லை; சட்டநிலை தீர்மானிக்கப்படாத நிலையில், அவர்களுக்கு சுவாசிப்பதற்கான அவகாசத்தையும் தெளிவையும் பாதுகாப்பையும் கோருகிறோம்,” என்றார்.








