சிரம்பான், ஆகஸ்ட்.29-
இடைநிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறையில் சக பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நான்காம் படிவ மாணவன் ஒருவன் சிரம்பான், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.
மாஜிஸ்திரேட் சைஃபுல் சயொடி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 16 வயதுடைய அந்த மாணவன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.
மாணவனின் குறைந்த வயது காரணமாக வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெற்றது. கடந்த மே 2 ஆம் தேதி சிரம்பான், அம்பாங்கானில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியின் வகுப்பறையில் காலை 7.20 மணியளவில் 14 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாணவன் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் இராணுவ வீரரான அந்த மாணவனின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மகனை ஜாமீனில் விடுவிப்பதற்கு குறைந்த பிணைத் தொகையை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
தீர்ப்பு சொல்லப்படும் வரையில் அந்த மாணவனை நான்கு ஆயிரம் ரிங்கிட் ஜாமீனிவில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.








