இளைஞர்களும் மாணவர்களும் இன, மத வேறுபாடுகளைக் கடந்து நட்புறவை வளர்த்து, நாட்டின் ஒற்றுமைக்கான தூதர்களாக செயல்பட வேண்டும் என்று தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சரும், சிகாமட் எம்.பி.யுமான யுனேஸ்வரன் ராமராஜ் கேட்டுக் கொண்டார்.

ருக்குன் நெகாரா என்பது அரசு நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் ஐந்து கொள்கைகள் மட்டுமல்ல என்றும், மலேசியர்கள் ஒருவரையொருவர் மதித்து, வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு இணைந்து வாழ்வதற்கான வழிகாட்டி என்றும் அவர் கூறினார்.

ஜோகூர் மாநில அளவிலான 2026 ருக்குன் நெகாரா இளைஞர் பயணத் திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய யுனேஸ்வரன், கல்வி நிலையங்களில் உடல், வாய்மொழி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலான பகடிவதைகளைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன, மத உணர்வுகளைத் தூண்டும் இணைய உள்ளடக்கங்களுக்கு இளைஞர்கள் எளிதில் இரையாகக்கூடாது என்றும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களிடையே பாலங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய ஒற்றுமை குறியீட்டில் 2025ஆம் ஆண்டு மலேசியாவும் ஜோகூரும் 0.701 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும், ஒற்றுமையை தொடர்ந்து பேணுவது அனைவரின் பொறுப்பு என்றும் யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.








