May 4, 2026
Thisaigal NewsYouTube
கடுமையான சோர்வு காரணமாக ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

கடுமையான சோர்வு காரணமாக ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.20-

கடந்த சில வாரங்களாக நிலவிய பரபரப்பான பணிச் சுமையால் ஏற்பட்ட கடுமையான சோர்வு காரணமாக, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியான வேலைப் பளுவுக்குப் பிறகு, சீனப் புத்தாண்டு விடுமுறையின் நான்காவது நாளில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஸ்டீவன் சிம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"மருத்துவர்கள் என்னைச் சிறிது காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். நான் விரைவில் புத்துணர்ச்சியுடன் திரும்புவேன். தொடர்ந்து முன்னேறுவோம்... கடின உழைப்புக்குப் பின் நன்மைகள் தொடரும்," என்று அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இது குறித்து பெர்னாமா செய்தி நிறுவனம் தொடர்பு கொண்ட போது, அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவரது நிலைமை குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவரது ஊடக அதிகாரி கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான விரிவான காரணத்தை அவரது குடும்பத்தினர் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும், இருப்பினும் கடுமையான சோர்வு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

"அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை, மிகவும் சோர்வாக இருக்கிறார்," என்று கூறிய அந்த அதிகாரி, அமைச்சர் முழுமையாக ஓய்வெடுக்க அவரது குடும்பத்தினர் போதிய கால அவகாசத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Related News