Jun 7, 2026
Thisaigal NewsYouTube
டாயா கெர்ஜாயா 2.0 திட்டத்தில் 9 மில்லியன் ரிங்கிட் மோசடி: 143 நிறுவனங்கள், 320 தொழிலாளர்களிடம் எஸ்பிஆர்எம் விசாரணை
தற்போதைய செய்திகள்

டாயா கெர்ஜாயா 2.0 திட்டத்தில் 9 மில்லியன் ரிங்கிட் மோசடி: 143 நிறுவனங்கள், 320 தொழிலாளர்களிடம் எஸ்பிஆர்எம் விசாரணை

Share:

கோலா திரங்கானு, ஜூன்.07-

அரசாங்கத்தின் வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு திட்டமான டாயா கெர்ஜாயா 2.0-இல் முறைகேடுகள் நடந்துள்ளதை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கண்டறிந்துள்ளது.

இந்த முறைகேடுகளில் மொத்தம் 9.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போலி கோரிக்கை விண்ணப்பங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அப்துல் ஹாலிம் அமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மோசடியில் தொடர்புடையவர்களுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில், சமூக பாதுகாப்பு நிறுவனமான 'பெர்கேசோ' (PERKESO) முன்னெடுத்த இத்திட்டத்தின் அரசாங்க நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நாடு முழுவதும், 143 நிறுவனங்களுக்கும், 320 தொழிலாளர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.

டாயா கெர்ஜாயா 2.0 திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் கைதிகள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட, தகுதியுள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் பணியமர்த்தும் போது, அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு மாதம் 1,500 ரிங்கிட் ஊதிய ஊக்கத் தொகையை முதலாளிகளுக்கு வழங்குகின்றது.

என்றாலும், எஸ்பிஆர்எம்மின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில், ஊழியர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தாலும் கூட உண்மையில் அப்படி யாரும் இல்லாத நபர்களை தாங்கள் கண்டறிந்துள்ளதாக திரங்கானுவிலுள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் இன்று நடைபெற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுமார் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 1,638 நிறுவனங்களை எஸ்பிஆர்எம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.

என்றாலும், அவ்வழக்குகள் இன்னும் ஆரம்பக் கட்ட விசாரணையிலேயே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News