அலோர் காஜா, ஜூன்.07-
மலாக்காவின் மஸ்ஜிட் தானா இண்டஸ்டிரியல் பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.47 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மலாக்கா தீயணைப்புத் துறையின் இரண்டாம் மண்டலத் தலைவரும், ஆபத்தான இரசாயனப் பொருட்கள் நிபுணரான ஸுல்கைரானி ரம்லி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கையாக தொழிற்சாலையைச் சுற்றி 50 மீட்டர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, ஆபத்து மதிப்பீடு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், முதற்கட்ட சோதனையில் கட்டிடத்தின் உள்ளே அமோனியா வாயு செறிவு 300 ppm ஆகவும், கட்டிடத்திற்கு வெளியே 75 ppm ஆகவும் பதிவாகியிருந்ததாகவும் ஸுல்கைரானி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வாயுக் கசிவு சம்பவமானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் விவரித்துள்ளார்.








