கோலாலம்பூர், ஜூலை.21-
தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மூவார் தொகுதிக்கு அரசாங்க மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கடந்த 500 நாட்களுக்கு மேலாகப் போராடி வந்த மூடா கட்சியின் முன்னாள் தலைவர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மானுக்கு இறுதியில் 2 லட்சம் ரிங்கிட் மானிய ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
அந்த மூவார் எம்.பி. இது குறித்து தனது தொகுதி மக்களுக்கு அறிவித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு நல்கி வந்த சையிட் சாடிக், தனது ஆதரவை மீட்டுக் கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினராக மாறியதைத் தொடர்ந்து ஆளும் அரசாங்க எம்.பி.க்களுக்கு கிடைத்து வரும் மானியம் அவருக்கு நிறுத்தப்பட்டது.
இதனால், தனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதற்காக மூவாரிலிருந்து நாடாளுமன்றம் வரை நெடுந்தூர ஓட்டத்தின் மூலம் சையிட் சாடிக், நிதி திரட்டி வந்தார். மாடல் அழகராகவும் பணியாற்றி, தொகுதி மக்களுக்கு பணம் திரட்டி வந்தார்.
எனினும் அரசாங்கம் வழங்கி வந்த இந்த இரண்டு லட்சம் ரிங்கிட், தொகுதியில் உள்ள சேவை மையத்தின் வாடகை, பணியாளர்கள் சம்பளம், நிர்வாக செயல்பாட்டிற்கான செலவினம் ஆகியவற்றுக்கே சரியாக இருக்கும் என்று சையிட் சாடிக் குறிப்பிட்டார்.








