கோலாலம்பூர், செப்டம்பர்.25-
ஒரு மலேசியரான தட்சணாமூர்த்திக்கு இன்று செப்டம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தட்சணாமூர்த்தியின் சடலத்தை 3 மணிக்கு கோரிச் செல்லுமாறு, குடும்ப உறுப்பினர்களுக்கு சாங்கி சிறைச்சாலை வாரியம் அறிவித்துள்ளதாக அந்த இளைஞரின் முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி தெரிவித்தார்.
முன்னதாக, போதைப் பொருள் கடத்தலுக்காக இன்று அதிகாலையில் 5 மணியளவில் தட்சணாமூர்த்திக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனையை சாங்கி சிறைச்சாலை இலாகா ஒத்தி வைக்க முடிவு செய்ததாக நேற்று நள்ளிரவு அவரின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் தெரிவித்ததாக மனித உரிமை வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்தார்.
இந்தச் செய்தியைக் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்த நிலையில் 39 வயதுடைய அந்த மலேசிய இளைஞருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது குடும்பதினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
"திடீரென்று, எங்களுக்கு இந்தத் தகவல் கிடைத்தது, இது அதிர்ச்சியூட்டுகிறது. கொடூரம் நிறைந்தது என்று சுரேந்திரன் தெரிவித்தார்.








