கோலாலம்பூர், ஜூலை.29-
நாட்டில் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண விதிப்பை முழுமையாக அகற்றுவதை விட டோல் கட்டண உயர்வை ஒத்தி வைப்பதே சாத்தியமான நடைமுறையாகும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
டோல் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் பில்லியன் கணக்கில் இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது டத்தோ ஶ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி இவ்விவரத்தை வெளியிட்டார்.
டோல் கட்டண விதிப்பை முழுமையாக அகற்ற இயலாது. காரணம், நெடுஞ்சாலைகளின் பராமரிப்புக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் அதிகமாகச் செலவிட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் டோல் கட்டண உயர்வை ஒத்தி வைக்க முடியும் என்றும், இதுவே எதார்த்தமான நடைமுறையாகும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.








