கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஷா ஆலாம், உயர் நீதிமன்றம் தம்மைத் திவாலானவர் என்று பிரகடனப்படுத்தியதைத் தொழில் அதிபர் டத்தோ ஶ்ரீ ஜி. ஞானராஜா, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார்.
தாம் நியமித்த வழக்கறிஞர் நிறுவனமான டென்னிஸ், நிக் & வோங் சட்ட நிறுவனத்திற்குத் தாம் செலுத்த வேண்டிய 53 லட்சம் ரிங்கிட் வழக்கறிஞர் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதால் அந்த நிறுவனம் தனக்கு எதிராக மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் தாம் திவாலானவராக அறிவிக்கப்பட்டது என்று பிரபல தொலைக்காட்சி பிரபலம் கீதாஞ்சலியின் கணவரான ஞானராஜா தெரிவித்தார்.
தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மோசடி குற்றச்சாட்டு வழக்கில் தம்மைப் பிரதிநிதித்து அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் ஆஜரானதாக ஞானராஜா குறிப்பிட்டார்.
பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான கடலடி சுரங்கப் பாதைத் திட்ட ஊழல் வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்கையில் அரசு தரப்பின் முக்கியச் சாட்சியான ஞானராஜாவிடம், லிம்மின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் குறுக்கு விசாரணை நடத்திய போது மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
திவால் உத்தரவை ரத்து செய்வதற்கு இதுவரை நடவடிக்கை எடுத்தீர்களா? என்று ராம் கர்ப்பால் மீண்டும் கேள்வி எழுப்பிய போது, தனது வழக்கறிஞர்கள் அதனைக் கையாண்டு வருகின்றனர் என்று ஞானராஜா பதில் அளித்தார்.
நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் நேற்றைய விசாரணையில், சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிடம் 20 லட்சம் ரிங்கிட்டைத் தாம் கொடுத்ததாக ஞானராஜா தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மவுண்ட் கியாராவில் 10 லட்சம் ரிங்கிட்டையும், 11 நாள் கழித்து தம்முடைய வீட்டிற்கு வந்த லிம்மிடம் இரண்டாவது முறையாக பத்து லட்சம் ரிங்கிட்டையும் தாம் கொடுத்ததாக ஞானராஜா சாட்சியம் அளித்தார்.








