“பெருநிறுவன முறைகேடு” நடவடிக்கைகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மலேசியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் விசாரணைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சிலர் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாகவும் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விசாரணையை தொடர்ந்து முன்னெடுக்க உத்தரவு கிடைத்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் முழுமையான விவரங்களை வெளியிட முடியாது என்று புக்கிட் அமானில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளுடன் தொடர்புடைய வழக்குகளில், அரசாங்க மட்டத்திலும், சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையிலும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் பிரபல புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் MACC ஒரு வணிகக் கூட்டமைப்பு மூலம் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை கைப்பற்ற பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த விவகாரம் தீவிரமடைந்தது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை தற்போதை வரை MACC மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.








