கோலாலம்பூர், நவம்பர்.18-
பத்துகேவ்ஸ் அருகில் கோம்பாக்கிற்குச் செல்லும் எம்ஆர்ஆர் 2 சாலையில் இசிஆர்எல் ரயில் திட்டத்தின் நிர்மாணிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அப்பகுதியில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் Malaysia Rail Link Sdn. Bhd. நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று பிற்பகலில் எம்ஆர்ஆர் 2 சாலையின் மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணியில் இரும்பு இணைப்புத் தூண்கள் சரிந்து கார் மீது விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிச் செய்யப்படும் வரையில் நிர்மாணிப்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று நிகழ்ந்த விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட எம்ஆர்ஆர் 2 சாலை மீண்டும் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் திறக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








