கோலாலம்பூர், பிப்ரவரி.05-
சிங்கப்பூரில் பணி புரியும் மலேசியர்கள் தங்களின் தினசரி எல்லைத் தாண்டிய பயணங்களின் போது அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய புதிய காப்புறுதி திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜோகூரிலிருந்து தினமும் எல்லை தாண்டிச் செல்லும் சுமார் 4 லட்சம் மலேசியர்கள், வேலை நேரத்திற்குப் பிறகு சமூகப் பாதுகாப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதை இந்தப் புதிய திட்டம் உறுதிச் செய்யும் என்று ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் டத்தோ ஶ்ரீ ரமணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இந்தப் புதிய காப்புறுதித் திட்டம் தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்றும் அவர் மேலும் கூறினார்.
சிங்கப்பூரில் பணி புரிகிறார்கள் என்பதற்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது. அவர்கள் மலேசியாவைச் சேர்ந்தவராக இருக்கும் வரை, அதே தரத்திலான பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
சுமார் 1.18 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் சிங்கப்பூரில் பணி புரிகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் பேர் தினமும் எல்லை கடந்து பயணம் செய்கின்றனர்.
அனைத்துலக தொழிலாளர் அமைப்பான ILO –வின் தரநிலைகளுக்கு ஏற்ப சட்டங்கள் திருத்தப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வேலை வாய்ப்பு காப்புறுதி முறை சட்டத் திருத்தம் 2025 இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.








