கோலாலம்பூர், ஜனவரி.16-
ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆயுதப்படை மற்றும் அரச மலேசிய போலீஸ் அனைத்துக் கொள்முதல் முடிவுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கொள்முதல் நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்யும் வரை இந்நடவடிக்கை தொடரும் என்றார் அவர்.
இன்று வெள்ளிக்கிழமை வங்சா மாஜுவில் உள்ள Usamah Bin Zaid பள்ளிவாசலில் பிரார்த்தனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மூலம் கொள்முதல் செயல்முறைகள் அனைத்தும் மறுஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும். தற்போதுள்ள அமைப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்வதே இதன் நோக்கம் என்றார் பிரதமர்.
தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நோர்டினின் தெளிவான அறிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொள்முதல் அமைப்பில் உள்ள பலவீனங்கள் குறித்த அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறேன். அதன் அடிப்படையில் முழுமையான மறுசீரமைப்பு செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்க் குலைக்கும் முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுக்க இந்த ஆண்டு அமைச்சின் ஊழல் தடுப்புத் திட்டத்தில் பெரும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதையும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
கடந்த ஜனவரி 7-ஆம் தேதி, ராணுவ கொள்முதல் திட்டத்தில் முறைகேடு செய்ததாக முன்னாள் ராணுவத் தளபதி ஒருவர் மற்றும் அவரது இரு மனைவிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 11.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.








