முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றை திருத்துவதற்கு, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதித்தது.
வழக்கு விசாரணை தொடங்கி ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டாலும், இது எதிர்தரப்பிற்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நீதிபதி அஸுரா அழ்வி தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், முதல் குற்றச்சாட்டிலிருந்து "பெற்றார்" என்ற சொல்லை நீக்குமாறு, அரசுத் தரப்பு, கடந்த மாதம் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது.
குறிப்பிட்ட குற்றச்சாட்டானது, தொடர்புடைய சட்ட விதிகளுக்கு இணக்கமாக அமைவதை உறுதிசெய்யவே, இந்தத் திருத்தம் அவசியமாகிறது என்பதில் நீதிமன்றம் திருப்தி அடைந்துள்ளதாகவும் நீதிபதி அஸுரா குறிப்பிட்டுள்ளார்.
பினாங்கு முதலமைச்சராகத் தான் வகித்த பதவியைப் பயன்படுத்தி, நிறுவனம் ஒன்று, கடலடி சுரங்கப்பாதை திட்டத்தைப் பெறுவதற்கு உதவுவதற்காக, வெகுமதி கோரியதாக, லிம் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அந்த நிறுவனம் ஈட்டவிருக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை அவர் கோரியதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளையில், இந்த திட்டத்திற்காக அவர் 3.3 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களுக்கு மாநில அரசுக்குச் சொந்தமான இரண்டு நிலங்கள் கைமாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.








